Irainabu quotes tamil

 1) கைத்தடியாக இல்லாமல் முதுகெலும்பாவதே முதிர்ந்த நட்பு.

2) அழும்போது கடந்த காலத்திலும் 

சிரிக்கும்போது நிகழ்காலத்திலும் 

நிலைகுத்தி நிற்கிறோம்.

3) வியர்வையைச் சேமிக்கிறவன் 

கண்ணீரைச் செலவழிப்பான் 

4) பற்று வைப்பவர்கள் 

பற்ற வைப்பதில்லை.

5) கள்ளிக்காட்டுக்கு எதற்கு 
முள்ளில் வேலி!
6) வளமானவரிடம் அல்ல,
வளர்த்தவரிடம் மட்டுமே 
வாலாட்டுகிறது நாய்.
7) சிலர் 
அலுவலக உடுப்பை 
அகத்திலும் 
அகற்றுவதே இல்லை.
8) தங்கள் இடத்தில் 
வெடுக் வெடுக்கென்று 
பேசுபவர்கள்தாம் 
வேறுபட்ட சூழலில் 
வெட வெடவென 
நடுங்குகிறார்கள்.
9) கடைக்கால் கண்ணுக்குத் தெரிவதில்லை என அதில் 
கஞ்சத்தனம் காட்டுபவனின் கட்டடமே 
இடிந்து விழும்.
10) வண்டுகள் வாசிப்பதையே 
கைத்தட்டலாக எண்ணி 
களிப்படைகின்றன
காட்டுப்பூக்கள்.
11) திருப்பமில்லா வாழ்வும் 
விருப்பமில்லா உறவும் 
வெறுத்துப் போகும்.
12) கடல்களைக் கடந்துவந்தவன் 
கைவிரல் கதவிடுக்கில்
சிக்கி நசுங்குவது போலத்தான் 
சில நேரங்களில் 
வாழ்க்கை.
13) எளிதாக இயலும் 
புன்னகையைத்தான் 
சிந்துவதற்கு பலர் 
சிரமப்படுகிறார்கள்.
14) வெற்றிக்கோப்பையுடன் 
வந்தாலும் 
வெற்றுக்கைகளோடு 
வந்தாலும் 
உச்சி முகர்வதே தாய்மை.
15) தெருவில் தினம் தினம் 
பணியாற்று பவர்களால்தாம் 
நாம் வீட்டில் திருப்தியாக வாழ்கிறோம்.
16) திரை மறைவில் நடப்பவை சில நேரங்களில் 
தெரியாமல் இருப்பதே 
நல்லது.
17) பயனுள்ள கற்கள்தாம் 
கட்டி கட்டியாக 
வெட்டி எடுக்கப்படுகின்றன.
18) களைகளைப் பிடுங்குகிறேன் எனச் சில 
பாவிகள் பயிர்களையும் 
பிடுங்கி விடுகிறார்கள்.
19) வளமையில் வராத 
பொறுமையை 
வறுமை கற்றுத்தருகிறது.
20) கண்களால் கைது 
செய்வதற்கு 
கண்ணியமான பெயர்தான் 
காதல்.
21) மலர்வதற்கு முன்பே 
மகரந்தச்சேர்க்கைக்குத் துடிக்கின்றன 
சில மொட்டுக்கள்.
22) நடந்து நடந்துதேய்த்தாலும் 
சளைக்காமல்
 வரப்பில் வளரும் புல்லே 
வைராக்கியத்தின் வடிவம்.
23) சிலரது அர்த்தமற்ற 
அமைதியாலேயே 
புயல் அடிப்பதுண்டு.
24) அரிக்காமலேயே 
அடுத்தவர்களால் 
முதுகு சொரியப்படுபவர்களே  
இங்கு அதிகம்.
25) அரைப்பவை பற்கள்.
அனுபவிப்பதோ நாக்கு.
26) சிலருக்கு 
எதிர்வினை ஆற்றாமல் 
இருப்பதே இணையற்ற 
எதிர்வினை.
27) நூல் என்னவோ 
துண்டித்துக் கொள்கிறது.
சேலைதான் 
துக்கித்துக் கிடக்கிறது.
28) அளவுக்கு மிஞ்சி 
அருந்தும் அவாவை 
அளிக்காததே 
அமிர்தம் 
29) மகிழ வைக்கும் மலரோ 
மணிக்கணக்கில் :
குத்திக்கிழிக்கும் முள்ளோ 
நாட்கணக்கில்.
30) சட்டைப்பையை உறிஞ்சும் 
அட்டைகள் 
உதிர்வதே இல்லை 
31) குற்றத்தினும் கொடியது,
அதை 
நியாயப்படுத்துவது.
32) கள்ளிக்கருகில் வளர்ந்தாலும் 
மல்லி தன் 
மணத்தை விடுவதில்லை.
33) சிலரது தளுக்குப் பேச்சு 
எலும்புக்கூட்டுக்குப்
போர்த்தியப் பட்டாடை.
34) உணவு
 மட்டுமல்ல,
உழைப்பும் 
மருந்துதான்.
35) வீடுகள் சின்னதாய் 
இருந்தபோது 
விருந்தினர்கள் 
நிறைந்திருந்தார்கள்.
36) நமக்குப் 
பறித்தவை,
செடிகளுக்குப் 
பறிபோனவை 
37) நயவஞ்சகர் 
நறுக்கிப்போடும்
நகங்களில் கூட 
நஞ்சிருக்கும்.
38) உயர்ந்த  எழுதுகோலுக்கும் 
அழகிய எழுத்துக்கும் 
ஒரு தொடர்பும் இல்லை 
39) சாப்பாட்டுக்கு 
பதிலி இல்லை 
சத்து மாத்திரைகள்
40) உற்றுப்பார்த்தால் 
ஒரு வகையில் 
கோபம் கூட 
சமரசம்தான்.
41) பயன்படுத்துவதால் பணமும் 
பயன்படுத்தாததால் 
நட்பும் வளர்கின்றன.
42) கல்லூரி கற்றுத்தராததை 
காலம் கற்றுத் தருவதே 
அனுபவம்.
43) சேர்த்ததும் செலவாகிவிடும் 
சேர்க்கை 
சரியில்லாவிடின் 
44) இலக்கல்ல 
பாலைவனச்சோலை,
இளைப்பாறும் 
இடமே அது.

Comments